மணிப்பூர் காணொளி விவகாரம் குறித்து மத்திய புலனாய்வு பணியகம் விசாரணைகளை மேற்கொள்ள இந்திய மத்திய உள்துறை அமைச்சு பரிந்துரைத்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்கள் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி விவகாரத்தை மத்திய புலனாய்வு பணியகம் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், குறித்த காணொளி தொடர்பான வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றுவதற்கு மத்திய அரசு உயர்நீதிமன்றிடம் புதிய மனுவை தாக்கல் செய்யவுள்ளது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இந்திய மக்களவையும், மாநிலங்களவையும், இன்றைய தினமும் சில மணித்தியாலங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நேற்று ஆறாவது நாளாக முடங்கியதாக, இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கறுப்பு உடை அணிந்தும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகங்களுக்கு இடையே இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் சுமார் 160 பேர் வரை பலியாகினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் எனக் கோரியும், விவாதம் நடத்த கோரியும் அமளியில் ஈடுபடுவதால், இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை முன்வைக்கவும் எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
நம்பிக்கையில்லா பிரேரணை அறிவித்தலை, சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளபோதிலும், அதன் மீது விவாதம் நடைபெறும் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.