13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு இடையே பொது இணக்கப்பாடொன்று இல்லை என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி கூட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் அந்த மக்களுக்கு சேவையாற்றவில்லை எனவும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
13ஆம் திருத்தச் சட்டத்தில் உள்ள சகல அதிகாரங்களும் வழங்கப்படுமா? என்ற கேள்விக்குள்ளேயே காவல்துறை அதிகாரம் தொடர்பில் பிரச்சினை எழுகிறது.
குறிப்பாக வடக்கில் பொதுவான சந்தேகம் நிலவுகிறது.
ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் வடக்கில் இருந்தால் என்றாவது தங்களுக்கு எதிராக அவர்கள் திரும்புவார்கள் என்ற அச்சம் அந்த மக்களிடம் உள்ளது.
எனினும், வடக்குக்கு தமிழ் காவல்துறையினர் அவசியமில்லை.
அங்கிருக்கின்ற காவல்துறையினரை தமிழாக்க வேண்டும்.
எனவே, வடக்கு தமிழ் தலைவர்களிடையே மாறுபட்ட கோரிக்கைகளே காணப்படுவதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.