கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஹரியாணா மாநிலத்தின் நூ நகரில் மூன்றாவது நாளாக நேற்றும் கட்டட இடிப்பு நடவடிக்கை தொடர்ந்தது. ஒரே நாளில் 20 இற்கும் மேற்பட்ட கடைகள் இடிக்கப்பட்டன.
ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தை தடுக்க முயன்றதால் ஏற்பட்ட மோதல், கலவரமாக மாறி, பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவியது. இதில் ஊர்க்காவல் படையை சேர்ந்த இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். வாகனங்கள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட சொத்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதனையடுத்து நூ நகரில் இருந்து 20 கிலோ மீற்றர் தொலைவில் டாரு என்ற இடத்தில் வசித்த புலம்பெயர்ந்த குடும்பங்களின் சுமார் 250 குடிசைகள் கடந்த வியாழக் கிழமை மாலையில் இடித்து அகற்றப்பட்டன. இது, அரசு நில ஆக்கிரமிப்பாளர்கள் மீதான நடவடிக்கை மட்டுமின்றி, கலவரக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.
இந்த நிலையில், மூன்றாவது நாளான நேற்று பல்வேறு இடங்களில் கட்டட இடிப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
குறிப்பாக, ஷாஹீத் ஹசன் கான் மேவாதி அரசு மருத்துவக் கல்லூரி முன்னால் இருந்த பல கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. கல்லூரியின் முன்பக்க வாயிலுக்கு எதிராக இருந்த கடைகள் இடிக்கப்பட்டன. இவை அனைத்தும் அதேபகுதியில் பல ஆண்டுகளாக அங்கேயே இருந்த கடைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், மாவட்ட நிர்வாகத்தின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கட்டட இடிப்பு இடம்பெற்று வருகிறது. இதுவரை 50 முதல் 60 கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.