அரசின் அனைத்துத் துறைகளையுமே ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தலையிட்டு நடத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
லடாக் பகுதியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி இரண்டு நாள் பயணமாக ராகுல் லடாக் சென்றார். ஆனால், அங்கு சென்றபின்னர் தனது பயணத்தை அவர் மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்தார்.
இதன்போது அவர் லடாக்கில் உள்ள கார்கில் பகுதி இளைஞர்களை சந்தித்துப் பேசவுள்ளார். லடாக் ஹில் கவுன்சில் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், ராகுல் காந்தியின் லடாக் பயணம் கவனம் பெற்றுள்ளது. அதுவும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி அங்குள்ள லடாக் பகுதிக்குச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ராகுல் காந்தி, பா.ஜ.கவின் கொள்கை ஊற்றான ஆர்.எஸ்.எஸ். தான் நாட்டின் அனைத்து துறைகளையும் ஏற்று நடத்துகிறது.
இதற்காக ஒவ்வொரு துறையில் ஆர்.எஸ்.எஸ். சார்புடைய நபர்கள் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்படுகின்றனர். மத்திய அமைச்சர்களே பலரும் தங்களின் துறைகளை தாங்கள் வழிநடத்தவில்லை மாறாக, ஆர்.எஸ்.எஸ். சார்புடைய அதிகாரிகள் தான் நடத்துகின்றனர். அவர்கள்தான் எல்லாவற்றையும் பரிந்துரைக்கின்றனர்என்று தெரிவித்துள்ளார்.