கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அழைப்பிற்கிணங்க அந்த குழுவினர் நாட்டிற்கு வந்துள்ளனர்.
இலங்கையின் கரையோரப் பகுதிகளை பாதுகாப்பது தொடர்பில் 3 செயன்முறைகளின் ஊடாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இலங்கை அதிகாரிகளை தெளிவுபடுத்தவுள்ளனர் என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கப்பல் விபத்து மற்றும் கடலோர குழாய் அமைப்புகளில் காணப்படும் கோளாறுகள் ஆகியவற்றை முன்கூட்டியே தடுத்தல், கப்பல் விபத்துகள் ஏற்பட்டால் அதன் பாதிப்பை சரியாக மதிப்பிடுதல் மற்றும் அவ்வாறான பாதிப்புகளுக்கான இழப்பீடுகளை பெற்றுக்கொள்வதற்கான சரியான நடைமுறை ஆகிய செயன்முறைகள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.
இந்த தெளிவுபடுத்தலுக்காக இலங்கை துறைமுக அதிகாரசபை, கரையோர பாதுகாப்பு திணைக்களம், இடர்முகாமைத்துவ நிலையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.
போதுமான தொழில்நுட்ப அறிவின்மையால் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் பின்னர் நாட்டிற்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன என்று கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டின் பின்னர் நாட்டின் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.