வடமாக ஆளுநரின் நீதியற்ற அரசியல் தலையீடு காரணமாக வடமாகாண கல்வித்துறை பாதிக்கப்படுவதாக ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் குற்றச்சாட்டினார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் வடமாகணக் கல்வித்துறை தேவையற்ற அரசியல் தலையீடு காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.
வடக்கு ஆளுநர் இடமாற்றச் சபையின் தீர்மானத்தை மீறி வலிகாம வலையத்தில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் மூவரின் இடமாற்றத்தை நிறுத்தியுள்ளார்.
ஆளுநரின் அரசியல் தலையீடு வெளிப்படையாக தெரியவந்துள்ள நிலையில் இது எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
வடக்கில் நீதியை நிலை நாட்டுவேன் என கூறிக்கொண்டு வந்த ஆளுநர் நீதியை குழி தோண்டி புதைக்கும் விதமாக செயற்படுவது ஏற்க முடியாது.
இலங்கையில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வெளிநாடு சென்றுள்ள நிலையில் ஆளுநரின் தேவையற்ற அரசியல் தலையீடு ஏனைய ஆசிரியர்களை தமது செயற்பாட்டில் இருந்து பின்னோக்கி நகர்த்துவதாக அமையும்.
ஆகவே இடமாற்றச் சபையையின் தீர்மானங்களை மீறி வடக்கு ஆளுநர் இடமாற்றச் சபைத் தீர்மானங்களில் தலையீடு செய்வதை நிறுத்தாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தள்ளப்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.