பதிமூன்றாம் திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளிடம் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள மாகாணங்களுக்கு வழங்கும் முயற்சியில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்சியாகப் பேசி வருகிறோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இன்றையதினம் வியாழக்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்ற 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் இருப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்கு 13-வது திருத்தம் செயற்படுத்தப்பட வேண்டும்.
இதனை கருத்தில் கொண்டு மாகாண சபைகளிடமிருந்து மத்திக்குப் பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள மாகாணத்துக்கு வழங்குவது தொடர்பிலும் நியதிச் சட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் ஜனாதிபதியுடன் பல சுற்றுச் சந்திப்புக்களை மேற்கொண்டோம்.
நாம் சந்திப்புகளில் ஈடுபட்ட போது ரணில் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார் என சிலர் கூறினர் ஆனால் நாங்கள் சில விடயங்களை அவர் ஊடாக செய்விக்கலாம் என்ற நம்பிக்கையுடன் இணைந்து செயல்பாட்டு வருகிறோம்.
இறுதியாக இடம் பெற்ற ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் பறிக்கப்பட்ட மாகாண அதிகாரங்களை அவ்வாறு மீள வழங்குவது தொடர்பிலும் நியதிச் சட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் நிபுணர் குழு ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி சம்மதித்தார்.
ஜனாதிபதி வெளிநாடு சென்ற நிலையில் குறித்த குழுவை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் அவரின் பொறுப்பை செயல்படுதுபவர்களும் குழுவை நியமிக்கவில்லை.
13 ஆம் திருத்தம் தொடர்பில் இந்தியாவும் கரிசனையாக உள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியாவும் தங்களால் ஆன அழுத்தத்தை வழங்க வேண்டும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிலையான அரசாங்கம் ஒன்றின் ஜனாதிபதியாக இல்லாத நிலையில் சில விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தென் இலங்கையைச் சேர்ந்த சிலர் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.
அவ்வாறு முட்டுக்கட்டை போடுபவர்களுடன் மாகாண அதிகாரங்களை மாகாணத்திற்கு வழங்குவது தொடர்பில் பேசி இருக்கிறோம் இனிமேலும் பேச உள்ளோம்.
ஆகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கு செய்வாரா செய்ய மாட்டாரா என்ற விவாதங்களை தாண்டி தமிழ் மக்களின் இருப்புக்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பறிக்கப்பட்ட அதிகாரங்களையாவது அவர் மூலம் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை தொடர்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.