deepamnews
இலங்கை

பொது முடக்கத்திற்கு ஆதரவளிக்குமாறு 8 கட்சிகள் கூட்டாக அழைப்பு.

வடக்கு கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள பொது முடக்கத்திற்கு, தமிழ் பேசும் மக்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் தாம் உரிமையுடன் வேண்டுகின்றோம் என எட்டு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரியுள்ளன.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தீவு சுதந்திரம் அடைந்து, 75 வருடங்கள் கடந்து விட்ட போதிலும், தமிழ் பேசும் மக்களாகிய எமக்கு, உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நீதி கோரி நிற்கின்றோம்.

போர் முடிந்து 14 வருடங்கள் உருண்டோடி விட்டன. இருந்தும், இதுவரையில் எமக்கு நீதி வழங்கப்படவில்லை. மாறாக, எமது துன்பங்களும் துயரங்களும் நீடித்து நிற்கின்றன. எம் மீதான அழுத்தங்களும் நெருக்குதல்களும் தொடர்கின்றன.

எமது தாயகமான வட-கிழக்கு மாகாணங்களில் எமது பெரும்பான்மைப் பலத்தால் இருப்பை பலவீனப்படுத்தி, உரிமை கோரி நாம் எழுந்து நிற்க முடியாத நிலைமையை காலப்போக்கில் ஏற்படுத்தும் இலக்குடன், அரசாங்க மட்டத்திலும் – அதன் ஆதரவோடும் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எமது தாயகத்தில், வரலாற்று ரீதியாக எமது வழிபாட்டு தலங்கள் அமைந்திருந்த பல்வேறு இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் வழங்கிய கட்டளைகள் மீறப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் குருந்தூர்மலை திருகோணமலையில் கன்னியா மற்றும் விளையாட்டரங்க சுற்றாடல். யாழ்ப்பாணத்தில் தையிட்டி ஆகிய இடங்களில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

குருந்தூர்மலையிலும், தையிட்டியிலும் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளன. திருகோணமலையில் இலுப்பைக்குளத்தில், விகாரை ஒன்றுக்கான முன் நடவடிக்கைகள், ஆளுநரின் கட்டளையையும் மீறி மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொல்பொருள் திணைக்களம், வனத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன எமது பெருந்தொகையான காணிகளை ஆக்கிரமித்து அபகரித்துள்ளன. காணிகள் மீளக் கையளிக்கப்படும் என்று அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில். மயிலத்தமடு – மாதவனை பிரதேசத்தில் தமிழ்ப் பண்ணையாளர்களின் பல்லாயிரக்கணக்கான கால் நடைகளின் மேய்ச்சல் தரவையாக மிக நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த பாரிய பிரதேசத்தை, சிங்களக் குடியேற்ற வாசிகள் ஆக்கிரமித்து பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்ப் பண்ணையாளர்களின் கால் நடைகள் ஆக்கிரமிப்பாளர்களால் பெருந்தொகையில் பிடிக்கப்பட்டும், சுடப்பட்டும், கொல்லப்பட்டும் உள்ளன.

இதனால் பண்ணையாளர்களின் வாழ்வே இருண்டு போய் உள்ளது. பயிர் அறுவடை முடிந்தவுடன் குடியேற்ற வாசிகள் வெளியேறி விடுவார்கள் என்று அரசாங்கத் தரப்பில் கடந்த வருடம் கொடுக்கப்பட்ட வாக்குறுதி காற்றோடு கலந்து போய் பல மாதங்கள் ஆகிவிட்டது.

மறுபுறத்தில், குருந்தூர்மலை ஆலய வழக்கில் எமது மக்களின் வழிபாட்டு உரிமையை ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்த முல்லைத்தீவு நீதிபதி, அச்சுறுத்தல்கள் மற்றும் கொலை மிரட்டல்களின் விளைவாக நாட்டை விட்டே தப்பிச் சென்றுள்ளார் என்றுள்ளது.

Related posts

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் அறிமுகம்

videodeepam

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் ஜனாதிபதி அவசர கலந்துரையாடல்

videodeepam

பலநூறு கிலோமீட்டர்களை தாண்டி வந்து குருந்தூர் மலை பொங்கலை நிறுத்த முயற்சி!

videodeepam