பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
இந்த சட்டம் இரத்து செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
இறுதி யுத்தத்தில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்ததற்காக 9 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கண்காணிப்பாகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
சிறுபான்மை இனத்தவர் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களை தன்னிச்சையாக தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் மாற்றியமைக்கப்படும் என இலங்கை அரசாங்கம் சர்வதேச நட்பு நாடுகள், வர்த்தக பங்காளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பலமுறை உறுதியளித்துள்ளதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது கொடூரமான துஷ்பிரயோகம் என்பதுடன், தொடர்ச்சியாக ஒரு சமூகம் ஓரங்கட்டப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நல்லிணக்கம் தொடர்பில் பேசுகின்ற போதிலும், அவரது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப் பிளவுகளை மேலும் ஆழப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா இலங்கையின் சர்வதேச பங்காளர்கள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை விமர்சித்துள்ளன.
அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் பொருளாதார கொள்கைகள் தொடர்பான விமர்சனங்களை ஒடுக்குவதற்கும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் கொண்டுவரப்பட்ட உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம் கருத்து சுதந்திரத்தை வரையறுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.