ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமையவுள்ள கூட்டணியில் இனவாதிகளை இணைத்துக்கொள்ள வேண்டாம் என்று அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன வலியுறுத்தியுள்ளன.
புதிய கூட்டணியை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிராக இடம்பெற்றுவருகின்றன.
இதில் டலஸ் அணி உறுப்பினர்களும் இணையவுள்ளனர். இதில் சிலருக்கு பதவிகள் வழங்கப்படவுள்ளன.
இந்நிலையிலேயே இனவாதம் கக்குபவர்களுக்கும், கடும்போக்குவாதிகளுக்கும் இடமளிக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவர்கள் இதனைக் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர் எனத் தெரியவருகிறது.
‘ராஜபக்ஷ அரசின் வீழ்ச்சிக்கு இனவாதிகளே காரணம். தற்போது ராஜபக்ஷர்கள் சுயாதீனமாக இருந்தாலும் அவர்களை இணைத்துக்கொண்டால் அது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கும்’ என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.