ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு தேவையான 51 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டதன் பின்னர் தேர்தலில் இறங்குவது பற்றிய எனது உத்தியோக பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.”
– இவ்வாறு பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் சார்பில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தம்மிக்க பெரேரா உட்பட நால்வரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என அக்கட்சின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பொதுஜனபெரமுனவின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்குத் தயாராகின்றீர்களா என்று கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
“நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகவே உள்ளேன். எனது பெயர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
அவ்வாறான நிலையில், நான் இன்னமும் உத்தியோக பூர்வமான முடிவை எடுக்கவோ அறிவிக்கவோ இல்லை. எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான 51 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உருவாகின்றபோது நான் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கும் முடிவு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பைச் செய்வேன்” – என்றார்.