இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சட்டவிரோதக் கைதுகளுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் துணை போகின்றதா என்ற கேள்வி எழுகின்றது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
நீதி கோரி வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் வெடுக்குநாறிமலை ஆலயப் பூசகர் உள்ளிட்ட கைதிகளை நேற்றுப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே கஜேந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வவுனியா சிறைச்சாலைக்குச் சென்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 8 பேரையும் பார்வையிட்டேன். அதில் 5 பேர் மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதம் இருக்கின்றார்கள். பொய்யான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. அவர்களது உடல் நிலை மோசமடைகின்றது. அதில் சிலருக்கு ஆஸ்மா, சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளன. அவர்கள் உரிய முறையில் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவில்லை.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் இதுவரை அவர்களைப் பார்வையிடவில்லை. கைது இடம்பெற்ற அன்றே மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்தபோதும் இதுவரை பார்வையிடவில்லை. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சட்டவிரோத கைதுகளுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் துணை போகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.” – என்றார்.