நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, பௌத்த மதம் ஆகிய நான்கு அதிகார தூண்களின் மீதும் தாக்குதல் நடத்தி நாட்டை அழிக்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நிகழ்ச்சி நிரலின் படி, சனல் 4 அந்தச் செயற்பாட்டின் ஒரு பகுதியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வீரகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சனல் 4 ஊடாக நீதித்துறைக்கு கேடு விளைவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாறான கருத்துக்களை கூறுகின்றனர். இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வுத் துறைக்கு எதிரான சித்தாந்தங்களை உருவாக்குகிறார்கள். இறுதியில் என்ன நடக்கும்? இந்த நாட்டை அழிக்க ஆரம்பம் ஏற்படும். எமது கட்சியை வழிநடத்தும் மஹிந்த ராஜபக்ச யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்த தலைவர் என்பதை கட்சி என்ற வகையில் பொறுப்புடன் கூறுகின்றோம். மேலும், கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களை கொவிட் தொற்றுநோயிலிருந்து காப்பாற்றினார்.
மக்களின் உயிரைக் காத்த தலைவர்கள் எங்கள் கட்சியில் உள்ளனர். அன்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார், ஏனென்றால் கட்சியை விட நாடு பெறுமதிமிக்கது என்பதால். நாட்டுக்காக எப்போதும் தியாகம் செய்தவர். இன்று 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் செயற்பட்டு வருகின்றோம். ரணில் விக்கிரமசிங்க நாட்டை மீளக் கட்டியெழுப்புவார் என நம்பி இன்று கட்சியை பலப்படுத்தி அவருக்கு உதவுகின்றோம். இது கட்சி என்ற வகையில் தலைமை எடுத்த முடிவு.
எமது கட்சியை பலப்படுத்தும் வேலைத்திட்டம் தற்போது நாடு முழுவதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெறக்கூடிய சூழலை நாம் உருவாக்கியுள்ளோம். நான் சொல்கிறேன், தெற்கில் தகுதி தெரிந்த மக்கள் இருக்கிறார்கள். இந்த நாட்டிற்கு மஹிந்த ராஜபக்ஷவின் சேவையை பாராட்டுகின்ற மக்கள் இந்த மாகாணத்தில் உள்ளனர். உங்களுக்கான கடமைகளையும் பொறுப்புகளையும் நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.