சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க. எதிர்க்கவில்லை என்றும், அது தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை தலைநகர் ராய்ப்பூரில் வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,
நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளோம். இது வெறும் தேர்தல் அறிக்கை மட்டுமல்ல, இது எங்களின் தீர்மானம். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் அடுத்த 5 ஆண்டுகளில் சத்தீஸ்கரை முழுமையாக வளர்ச்சி பெற்ற மாநிலமாக நாங்கள் மாற்றிக் காட்டுவோம்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருப்பது குறித்து கேட்கிறீர்கள். முதல்வர் பூபேஷ் பெகலைவிட பொய்யான விளம்பரங்களைக் கொடுப்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. அவர் எப்படி வேண்டுமானாலும் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கலாம். அதற்கேற்பவே சமூகச் சூழலை அவர் சத்தீஸ்கரில் ஏற்படுத்தி இருக்கிறார்.
விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்துள்ளது. ஊழல் இல்லாத அரசை அவர் வழங்கி இருந்தால், இதுபோன்ற தள்ளுபடிகளுக்குத் தேவை இருந்திருக்காது. மக்கள் பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் வாக்குகளை செலுத்துகிறார்கள். பாஜக ஆட்சியில், சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. சட்டம் – ஒழுங்கு நன்கு பேணப்பட்டது. மக்கள் இதை அறிவார்கள்.
காங்கிரஸ் வெற்றி பெற்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். நாங்கள் அதுபோன்ற வாக்கு வங்கி அரசியலை மேற்கொள்ள விரும்பவில்லை. நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கவில்லை. இது குறித்து விரிவான விவாதம் மேற்கொள்ளப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.