கடந்த பத்த ஆண்டுகளில் இந்தியா அடைந்த சமூகப் பொருளாதாரப் புரட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையே காரணம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ பயணமாக பிரித்தானியா சென்றுள்ளார். லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பேட்டி பதாவோ – பேட்டி பச்சாவோ, ஜன்தன் யோஜனா, ஆவாஸ் யோஜனா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா மற்றும் ஸ்கில் இந்தியா போன்ற திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார்.
கடந்த பத்து ஆண்டுகளாக நீங்கள் கேள்விப்பட்ட இந்த திட்டங்களில்தான் நீண்ட பதில் அடங்கி உள்ளது. உலகம் மாறிவிட்டது, நமது உறவும் மாறிவிட்டது, பிரித்தானியா மாறிவிட்டது, இந்தியாவும் மாறிவிட்டது. இந்தியாவில் என்ன மாறிவிட்டது என்று நீங்கள் என்னிடம் கேட்கலாம். அதற்கு பதில் உங்களுக்குத் தெரியும். மோடிதான் அந்த பதிலும்கூட.
இந்தியாவும் பிரித்தானியாவும் ஓர் அன்பானதும், செழிப்பானதுமான உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. நாங்கள் இன்று இந்தியாவுக்கும் பிரித்தானியாவுக்கு இடையிலான உறவை மறுவடிவமைக்க முயற்சி செய்து வருகிறோம்.
மோடி தலைமையிலான அரசு 10 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கிறது. கடந்த 65 ஆண்டுகளில் உருவாக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு இணையாக கடந்த பத்து ஆண்டுகளில் புதிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை கட்டியுள்ளோம்.
கடந்த பத்த ஆண்டுகளில் இந்தியா அடைந்த சமூகப் பொருளாதாரப் புரட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையே காரணம். தேசத்தின் பாதையை வடிவமைப்பதில் பிரதமர் மோடி முக்கிய பங்காற்றினார் என்று தெரிவித்துள்ளார்.