இலங்கையின் நிலைப்பாடு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கமளிக்க புதுடில்லிக்கு விஜயம் செய்ய எண்ணியுள்ளதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவர் எப்போது இந்தியாவுக்கு செல்வார் என்பதை அவர் குறிப்பிடவில்லை. இது குறித்து ஜப்பானில் தாம் மோடியுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவிகோரும் வகையிலும், இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் குறித்த விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய இந்திய பிரதிநிதி, இலங்கைக்கு 2019 ஆம் ஆண்டில் இருந்து இந்தியா உதவியளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அண்டை நாடு என்ற அடிப்படையில் இலங்கைக்கான உதவி தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 3.1 மில்லியன் பயனாளிகளை இலக்காகக் கொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மறுசீரமைக்கப்பட்ட நலன்புரி நலத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பாதிப்புக்குள்ளான குடும்பங்கள் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்குள் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.