குருந்தூர் மலை பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக, ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி வருவதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைத்த கூற்றுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்தார்.
“குருந்தூர் மலை பிரச்சினையை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. தனிப்பட்ட விதத்திலும் அது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றோம்.
எந்த விதத்திலும் எவரும் இனவாதமாக செயற்படுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.
நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் சமமாக மதிக்கப்படுபவர்.
நாட்டின் அபிவிருத்தி உட்பட அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதுவே அவசியமாக உள்ளது.
ஜனாதிபதியின் உரை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டால் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள முடியாது என்பதை தெரிந்து கொண்டே அன்று அவர் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதை தவிர்த்தார்.
இப்போது எந்த விதத்திலும் ஒரு போதும் அவ்வாறான பொறுப்பை இந்த அரசாங்கத்தில் தான் எடுக்கப் போவதில்லை என தெரிவித்து வருகின்றார்.
இதன் மூலம் அவரது இரட்டை வேடம் புலப்படுகிறது.” என்றும் அவர் தெரிவித்தார்.