வளிமண்டலத்தில் வளி மாசு தரக்குறியீடு வழமைக்கு திரும்பியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
காற்றின் வழித்தடம் மாறுவதால் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் காற்று மாசு முகாமைத்துவ பிரிவின் தலைமை ஆய்வாளர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டார்.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள சூறாவளியால் தூசு அடங்கிய காற்று இலங்கை நோக்கி வீசுவதால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் வளி மாசு தரக்குறியீடு நேற்று முன்தினம் 150 முதல் 200 புள்ளிகள் அளவில் அதிகரித்திருந்தது.
இதனிடையே, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் படிப்படியாக வழமைக்கு திரும்புவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதனால், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றுக்காக வெளியில் செல்ல வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காற்றின் தரம் உடல் ஆரோக்கியத்திற்கு ஒவ்வாத நிலையை அடைந்துள்ளதால், சுவாசக்கோளாறு உடையவர்கள் எதிர்வரும் நாட்களுக்கு மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.