deepamnews
இலங்கை

இலங்கை குறித்த ஜெனிவா தீர்மானத்தை நிராகரிப்பதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள, இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிராகரிப்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“ ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தற்போது முன்வைக்கப்பட்டுள்ள நியாயமற்ற தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதற்கான எமது முடிவை வெளிப்படுத்தும் வகையில்,  இந்த ஊடக அறிக்கையினை வெளியிடுகிறோம்.

இத் தீர்மானமானது, தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள ராணுவ வீரர்களின், தமிழர்கள் மீதான அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் ஊக்குவிக்கும் விதமாகவே அமைந்துள்ளது.

தமிழர்களாகிய நாம் பல்லாண்டு காலமாக மிகப் பெரும் இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம்.

இந்தத் தீர்மானமானத்தினூடாக ஆகக்குறைந்தது நீதியாவது கிடைக்கும் என்று நம்பியிருந்தோம்.

ஆனால் இந்தத் தீர்மானத்தால் எங்களின் நம்பிக்கை பொய்த்துப் போயுள்ளது.

இந்தத் தீர்மானம், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள் பற்றிய எந்த புரிதலையும் வெளிப்படுத்தவில்லை.

ஆகக்குறைந்தது தமிழ் மக்கள் எதிர்கொண்ட துன்பங்கள், வேதனைகளை கூட பிரதிபலிக்கவில்லை.

இந்தத் தீர்மானம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வந்த சிறிலங்கா அரசாங்கங்களினால் தமிழர்கள் எதிர்கொண்ட கொடுமைகளுக்குத் தீர்வு வழங்கத் தவறிவிட்டது.

இத் தீர்மானம் குற்றம் இழைத்தவர்களை பொறுப்பு கூறவைப்பதற்குப் பதிலாக, அவர்களின் சர்வதேச குற்றங்களை வெள்ளை அடிப்பதுடன், அவர்களை பிணை எடுப்பதாகவே அமைத்துள்ளது.

தமது குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய தேவை இல்லை, தாம் தண்டனைக்கு உட்படுத்தப்படமாட்டோம் என உணரும் தமிழர் தாயகம் எங்கும் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா அரச படையினர், எதிர்காலத்திலும் தமிழர்களுக்கு எதிராக அட்டூழியங்களைத் தயக்கமின்றி மேற்கொள்வதற்கு, இத்தீர்மானம் வழி ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீர்மானம், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்த பரிந்துரையை முற்றிலும் புறக்கணித்துள்ளது.

ஐ.நா.வின் மூத்த அதிகாரிகள் மற்றும் பெரும் இழப்பினை சந்தித்த தமிழ் சமூகத்தின் பல்வேறு தரப்பினாலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், சமர்ப்பிக்கப்பட்ட இத்தீர்மானம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த தவறியது மட்டுமல்லாது, பாதிக்கப்பட்ட தமிழ் இனத்தின் பெரும் துயரத்தையும் வலிகளையும் புறக்கணித்துள்ளது.

ஆகவே இந்த நியாயமற்ற தீர்மானத்தை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம்”  என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உள்ளூராட்சி சபைத் தேர்தல் இரண்டாவது தடவையாக மீண்டும் ஒத்திவைப்பு

videodeepam

தபால் திணைக்களத்தை போன்ற போலி இணையத்தளத்தினூடாக நிதி மோசடி.

videodeepam

ஜனாதிபதித் தேர்தலில் தமது வெற்றி வாய்ப்பு  உறுதியானதும் உத்தியோகபூர்வ அறிவிப்பாம் – தம்மிக்க பெரேரா கூறுகிறார்.

videodeepam