deepamnews
இலங்கை

யாழ்ப்பாணத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவு – கொள்ளைகள், போதைப்பொருள் குற்றங்கள் அதிகரிப்பு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருவதுடன், கொள்ளைகள், வழிப்பறிகள், மற்றும் போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், யாழ்ப்பாணக் குடாநாட்டில், வீடுகளை உடைத்து திருடுவது, ஆயுத முனையில் கொள்ளையிடுவது, வழிப்பறி செய்வது, போன்ற குற்றச்செயல்கள் தீவிரமடைந்து வருகின்றன.

வடமராட்சிப் பகுதியில் கடந்த சில நாட்களில் அதிகளவு வழிப்பறி, வீடு உடைத்து திருட்டு, மற்றும் சங்கிலி அறுப்புச் சம்பவங்களில் நடந்தேறியுள்ளன.

நேற்று மாலை 6.30 மணியளவில் தனியாகச் சென்ற இரண்டு பெண்களிடம், வல்லைக்கும் உடுப்பிட்டிக்கும் இடையே, கத்தியைக்காட்டி மிரட்டி, சங்கிலி, காப்புகள் மற்றும் பணப்பை என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

சில நாட்களுக்கு முன்னர் உடுப்பிட்டி, அல்வாய் உள்ளிட்ட பகுதிகளில் 3 இடங்களில் சங்கிலி அறுப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை, வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் தொடர்ந்து பல வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு வந்த  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 11 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் உருக்கப்பட்ட தங்கம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கம்பர்மலையைச் சேர்ந்த 25 வயதுடைய முதன்மை சந்தேக நபரும் அவருக்கு உதவியாக இருந்த உடுப்பிட்டியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை பகுதியில் தொடர்ச்சியாக பூட்டியிருக்கும் வீடுகளை பகல் வேளைகளில் உடைத்து நகைகள் திருடப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, ஹெரோயின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை, பயன்பாடு என்பனவும் அதிகரித்துள்ளன.

கோப்பாய் பகுதியில் முக்கிய போதைப் பொருள் வியாபாரி உள்ளிட்ட இருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில், ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களுடன் பெண் உட்பட மூவர் நேற்று  நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 20 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

கரணவாய் பகுதியில் போதைப்பொருளுடன் நடமாடிய போதே 30 வயது பெண்ணும் 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இளைஞர்களில் ஒருவர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் என்றும் மற்றைய இளைஞனும் பெண்ணும் கரணவாய் – சமரபாகு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிசார் கூறினர்.

Related posts

கொத்து ரொட்டியின் விலை குறைப்பு

videodeepam

அவசியமான விடயங்களை இலங்கை செய்வதற்காக காத்திருக்கின்றோம் – சர்வதேச நாணயநிதியம்

videodeepam

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை – எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

videodeepam