பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வௌ சிறிதம்ம தேரர் ஆகிய இருவர் பற்றிய உண்மைகளை தெரிவிக்காத காரணத்தினால், ஒக்டோபர் 28 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு தங்காலை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முன்வைத்த வாதங்களை அடுத்தே நீதவான் ஹேமந்த புஸ்பகுமார இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சட்டத்தரணி நுவான் போபகே நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் மூலம் சந்தேகநபர்களின் தற்போதைய நிலைமையை நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
ஆரம்பத்தில் சந்தேகநபர்களை தங்காலைக்கு அழைத்துச் சென்ற போதிலும், பின்னர் அவர்கள், நாரஹேன்பிட்டியவுக்கு அழைத்து வரப்பட்டு, கடந்த ஒரு மாத காலமாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசந்த முதலிகே தற்போது அதிகாரிகளால் மருந்துவ வசதிகள் வழங்கப்படாமையால், கடுமையான தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிதம்ம தேரர் செவ்வாய்க்கிழமை அதிக காய்ச்சலினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் டெங்கு என தெரியவந்ததாகவும் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.