இலங்கையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இளைஞர்களிடையே எச்.ஐ.வி உள்ளிட்ட பாலியல் நோய்களின் பரவல் ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
சரியான விழிப்புணர்வு இல்லாமை மற்றும் பாதுகாப்பற்ற பரிசோதனைகளை மேற்கொள்வதே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அதன் பணிப்பாளர் கலாநிதி ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் ஆசிய பிராந்தியத்தில் எச்.ஐ.வி தொற்றுகள் பதிவாகும் நாடுகளில் இலங்கை மிகவும் பின் நிலையில் உள்ளது.
இலங்கையில் அதிக ஆபத்துள்ள குழுக்களிலேயே அதிகளவான பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக தேசிய பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் சுட்டிக்காட்டுகிறது.
கடந்த வருடம் ஜனவரி முதல் ஜுன் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கையில் 147 பேர் எஜ.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.
அதேவேளை, இந்த வருடம் அதே காலப்பகுதியில் 274 பேர் அடையாளம் காணப்பட்டதுடன், கடந்த செப்டெம்பர் வரை 342 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு பதிவாகியுள்ள தொற்றுக்குள்ளானவர்களில் 50 பேர் 18-30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் எனவும், இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இரட்டிப்பு அதிகரிப்பு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவர்களில் 14 பல்கலைக்கழக மாணவர்களும் மூன்று பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குகின்றனர். இதுதவிர. 2 பௌத்த பிக்குகளும் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மழையுடன் கூடிய காலநிலையால் டெங்கு நுளம்புகள் பெருகும் தன்மை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு 62,000 க்கும் மேற்பட்ட டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அதிகரிப்பாகும். அத்துடன், இந்த வருடம் டெங்கு தொற்றினால் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.