கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமாக பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், மக்களுக்கு சேவையாற்றாமல் ஊழல்களில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதன பசளையை வழங்குவதற்கு ஒரு நிறுவனம் மாத்திரமே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு நெருங்கிய ஒருவரே குறித்த நிறுவனத்தை நடத்தி செல்கின்றார்.
அவரின் ஊழல் சம்பவங்களை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர் மேற்கொண்ட ஊழல் செயல்களின் பட்டியல் எம்மிடம் உள்ளது.
சிறுநீரக நோயாளருக்கு வழங்கப்படும் பணத்தில் பாதியும், வயதானவர்களுக்கு வழங்கப்படும் பணத்தில் பாதியும் துண்டிக்கப்பட்டு வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
இடையில் கருத்துரைத்த கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் முறையற்ற விதத்தில் தமது பெயரை பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் குற்றச்சாட்டை மறுத்து கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், தம்மீதான கால்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து இருவருக்கும் இடையியே கருத்து மோதல் ஏற்பட்டது.