தமிழ்நாட்டின் உரிமையும், பாரம்பரியமும், கலாச்சாரமும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வும் அடங்கியுள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்ந்து நடைபெறுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழ்நாட்டின் கலாச்சாரப் பெருமையினை நிலை நிறுத்திடும் வகையில், தமிழ்ச் சமூகம் உயிருக்கு உயிராக நேசிக்கக்கூடிய, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுடன் பின்னிப்பினைந்திருக்கக் கூடிய, பாரம்பரிய பெருமைமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டினை தொடர்ந்து தமிழ்நாட்டில் நிரந்தரமாக நடத்திட ஏதுவாக இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் ஒரு சட்டத்தை நிறைவேற்றி, அதனை நடைமுறைப்படுத்திய அரசு அதிமுக அரசு என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டு காலம்காலமாக நடைபெற்று வந்த நிலையில், திமுக அங்கம் வகித்த மத்திய அரசு 2011 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதித்து ஓர் அறிவிக்கையினை வெளியிட்டது. இருப்பினும், 2009 ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட்டாலும், 2009 ஆம் சட்டத்தையும் உச்ச நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதன் காரணமாக ஜல்லிக்கட்டு விளையாட்டினை தமிழ்நாட்டில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.