இலங்கையில் சுமார் ஒரு தசாப்தத்தின் பின்னர் வளிமண்டலத்தில், அதிகளவான மாசு நேற்று படிந்ததாக மத்திய சுற்றாடல் அதிகாரச் சபை தெரிவித்துள்ளது.
மெண்டௌஸ் சூறாவளியினால் இந்தியாவில் இருந்து அதிகளவான மாசுகள் இலங்கையை சூழ்ந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சஞ்ஜய ரத்நாயக்க குறிப்பிட்டார்.
இதன் காரணமாக நாடளாவிய ரீதியில், அதிக குளிருடனான வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப் படிமங்கள் இன்று முதல் குறைவடையும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, நாடளாவிய ரீதியில், 60 சுற்றுப்புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அரச நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக, அதிகார சபைத் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில், சுற்றுப்புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற 60 நிலையங்களை நாட்டின் ஏனைய பாகங்களிலும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன்மூலம் பெறப்படும் தரவுகளை கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என மத்திய சுற்றாடல் அதிகார சபைத் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே தெரிவித்துள்ளார்.