இனப் பிரச்சினைக்கு அனைவரும் இணங்கக்கூடிய நல்லதொரு தீர்வை ஜனாதிபதி வழங்குவாராக இருந்தால் அதில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துகொள்ள வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்து முஸ்லிம்கள் மத்தியில் விசமத்தனமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இனப் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளதை தான் வரவேற்பதாகவும், இது தொடர்பில் விசமத்தனமான பிரசாரங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவது கவலைக்குரிய விடயம். இனப்பிரச்சினைக்கு தீர்வு குறித்து, தமிழ் மக்களின் அபிலாசைகள் என்பது சில சமயங்களில் முஸ்லிம்களின் அபிலாசைகளுடன் முரண்பட்ட விடயங்களாக இருக்கின்றபோது, தேவையற்ற சந்தேகங்களை குழப்பி ஒட்டுமொத்த இனப்பிச்சினைக்கான தீர்வு வருகின்ற சாத்தியப்பாட்டை குறைக்க முயற்சிக்கப்படுகின்ற விடயமாக உணர்கிறேன் எனவும் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு பிரதேசத்தையும் ஒரு அரசியல் அலகாக ஆக்கித்தர வேண்டும் என்ற கோரிக்கை தமிழர் தரப்பிலே நீண்டகாலமாக தெரிவிக்கப்பட்ட விடயமாக இருக்கிறது. ஆனால் இந்த விடயத்தில் முஸ்லிம் தரப்பு சற்று மாறுப்பட்டக் கருத்தை கொண்டிருக்கின்றது என்பதை தமிழ் தரப்பு புரிந்துகொண்டிருக்கும் என நாங்கள் முழுமையாக உணர்ந்திருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
அந்த அடிப்படையிலே இந்த விவகாரத்திலே தேவையற்ற விஷமத்தனமான பிரசாரங்களை மேற்கொள்ளாமல், அரசாங்கமோ தமிழ் தரப்போ இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுக்கின்றபோது இந்த விவகாரத்தில் கரிசனை உடைய ஏனைய தரப்பினரையும் இணைத்துக்கொண்டு இதற்கான தீர்வுகளை காண்பார்கள் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம் என்று ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.