இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் வகையில், சீன அரசாங்க தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரடி பேச்சுவார்த்தை ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதியளிப்புத் திட்டத்திற்கான ஆதரவை இந்தியா ஏற்கனவே தெரிவித்து விட்டது.
இதன்படி 10 வருடங்களுக்கு கடன் தடைக்காலத்தையும், 15 வருட மறுசீரமைப்பையும் வழங்க இந்தியா உடன்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஜப்பான் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு பாரிஸ் கிளப் மூலம் ஆதரவை தெரிவித்தது.
எனினும் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி, இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதாகவும், இதன் அடிப்படையில் இரண்டு வருட கடன் தடையை வழங்க முடியும் என்றும் இலங்கையின் நிதியமைச்சிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.
எனினும், இலங்கை தொடர்பான திட்டத்தைத் தொடர்வதற்கு சீனவின் முன்மொழிவு போதுமானதாக இல்லை என்று சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் ஒரே மாதிரியான திட்டம் இருக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
இந்தநிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் தலையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆதரவை நீடிக்கும் அறிக்கையை பாரிஸ் கிளப் இந்த வாரம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.