deepamnews
இலங்கை

தேர்தல் பாதிக்கப்பட்டால், குற்றச்சாட்டுக்களில் இருந்து அரசாங்கம் விடுபட முடியாது – ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவிப்பு

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கான நடவடிக்கையாகவே தெரிகிறது.

அதனால் இடம்பெறவிருக்கும் தேர்தல் சீர்குலைந்தால், அந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அரசாங்கத்தால் விடுபட முடியாமல் போகும் என பெப்ரல் அமைப்பினர் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவரும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வருகிறது.  

தேர்தல் பிற்போடுவதற்கு திட்டமிட்டே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவே எமக்கு விளங்குகிறது.

அத்துடன் இந்த நிலை பாரதூரமானதாகும். ஜனநாயகத்துக்கு சவால் விடுக்கப்படுகின்ற நிலையாகும். இந்நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சீர்குலைந்தால், இந்த பொறுப்பில் இருந்து அரசாங்கத்தால் விடுபட முடியாது.

இவ்வாறு தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் கொலை மிரட்டல்களை எந்த தரப்பினர் விடுத்திருந்தாலும், அது அரசாங்கத்துக்கே அவப்பெயரை ஏற்படுத்தும். அதேபோன்று இந்த தேர்தல் பிற்படுத்தப்பட்டாலும், அரசாங்கத்தின் மீதே குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படும்.

அதனால் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக அரசாங்கம் உரிய விசாரணை மேற்கொண்டு, எந்த தரப்பாக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால், இது பாரியதொரு பிரச்சினையாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது என்பதையும் அரசாங்கத்துக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

மட்டக்களப்பில் காணாமல் போன 24 வயது இளைஞன் சடலமாக மீட்பு

videodeepam

குழந்தையின்மை பிரச்சினைக்கான இலவச மருத்துவ முகாம்.

videodeepam

சிறுநீரக கடத்தலுடன் தொடர்புடைய தரகருக்கு விளக்கமறியல்

videodeepam