சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்குத் தேவையான கடினமான பணிகளை நாங்கள் வெற்றிகரமாகச் செய்து வருகிறோம். விரைவில் அவர்களின் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம் என 75 ஆவது சுதந்திர தினமான நேற்று நாட்டு மக்களுக்காக உரையாற்றிய ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன் வட, கிழக்கில் காணிகளை மீளக் கையளித்தல், கைதிகளை விடுதலை செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு நாம் முன்னுரிமை அளித்துள்ளதுடன் ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அராஜக அரசியல் சக்திகள் எத்தகைய தடைகளை ஏற்படுத்தினாலும், இந்த நாட்டை நேசிக்கும் பெரும்பான்மையான மக்களுடன் இணைந்து புதிய சீர்திருத்தத் திட்டத்தை முன்னெடுப்பேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதாரத்தை வலுப்படுத்துவதால் மட்டும் எம்மால் திருப்தி அடைய முடியாது. ஒட்டுமொத்தக் கட்டமைப்பிலும் நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த அரசியல் முறைமை, பாராளுமன்றம், நிறைவேற்று அதிகாரம், அரச பொறிமுறை ஆகிய அனைத்து துறைகளும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட வேண்டும்.
இந்த மாற்றம் நாட்டுக்கும் நமக்கும் நல்லதாக அமைய வேண்டும். புதிய முறைமையில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் கருத்துக்களுக்கும் பிரதிநிதித்துவங்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
இந்த முறைமை மாற்றத்துக்கு அவசியமான பல்வேறு சட்ட ஏற்பாடுகளை நாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம்.
அது போன்றே வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் விசேடமான பிரச்சினைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதற்கான அமைச்சரவை உபகுழுவை ஏற்கனவே நியமித்துள்ளோம்.
அங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதி, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவிக்கப்படும். அவர்களது கருத்துகளின்படி, அந்தப் பணிகள் முன்னெடுத்துச் செல்லப்படும்.
காணிகளை மீளக் கையளித்தல், கைதிகளை விடுதலை செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு நாம் முன்னுரிமை அளித்துள்ளோம்.
அது போன்றே ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.