சீனா தனது தேசத்தின் நண்பன் என்றும், இரு நாடுகளும் தொடர்ந்து கைகோர்த்து செயல்படும் என்றும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
கேரள மாநிலம் கொச்சியில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்திய நலன்களுக்கு எதிராக செயற்பட இலங்கை அனுமதிக்காது என்பதால், இந்தியா கவலைப்படத் தேவையில்லை என்று அலி சப்ரி கூறினார்.
இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் இலங்கை தமது மண்ணில் நடக்க அனுமதிக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
சீனாவும் இலங்கையின் நட்பு நாடு. இதற்காக இந்திய நலன்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட மாட்டாது என்பதை ஏற்கனவே இந்திய அரசிடம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளதாக சப்ரி கூறினார்.
இலங்கையும் இந்தியாவும் குடும்பம் போன்றது என்றும், பிரச்சினைகள் ஏற்படும் போது, ஒரு குடும்பத்தில் இருப்பதைப் போல அவை தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்தியாவின் மீன்வளத்துறை அமைச்சர் தற்போது கொழும்பில் இருக்கிறார்.
அவரை இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் சந்தித்துள்ளார்.
எனவே, இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கையின் கடற்படையினரால் தாக்கப்படுகிறார்கள் என்ற பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இந்தியா அடைந்து வரும் வேகமான வளர்ச்சி குறித்து இலங்கை மகிழ்ச்சி அடைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.