இலங்கை அரசாங்கம் கடந்த இருவருடகாலமாகக் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை மிகையாக முடக்கிவந்திருப்பதுடன் அதன்விளைவாக சிவில் சமூகங்களின் சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் எந்தவொரு சமூகத்திலும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன இன்றியமையாதவையாகும்.
அவற்றுக்கு மதிப்பளிக்கப்பட்டு, பாதுகாக்கப்படும் அதேவேளை, அவை உரியவாறு பூர்த்திசெய்யப்படவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் கருத்துச்சுதந்திரத்திற்கான இடைவெளி சுருக்கமடைந்து வருகின்றமைக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்துவரும் சர்வதேச மன்னிப்புச்சபை, இவ்விவகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை அரசாங்கம் பொதுமக்களின் குரலை அடக்கும் வகையில் தொடர்ச்சியாகவும் வலுவாகவும் ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்துவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு தற்போது அமைதிப்போராட்டங்களை அடக்குவதற்கும், எதிர்ப்புக்குரல்களை ஒடுக்குவதற்குமான ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முழுமையாக இல்லாதொழிக்கவேண்டியது அவசியமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.