நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதால், இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு சரியான நேரத்தில் கிடைக்கும் ஆதரவு எப்போதும் பாராட்டப்பட வேண்டியது என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்கான தேசிய நாணயங்களின் பயன்பாடு, வலுவான இருதரப்பு பொருளாதார கூட்டு மற்றும் பகிர்ந்த செழுமையை நோக்கிய கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த பல கடினமான தீர்மானங்களை எடுக்கும் அதேவேளை, பொருளாதாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் நிலைமையை இலங்கை எவ்வாறு முன்னெடுக்கப்போகின்றது என்பதை இராஜாங்க அமைச்சர் சுருக்கமாக விளக்கினார்.
மக்கள் கஷ்டப்படுகிறார்கள், ஆனால் அது நிச்சயமாக அவர்களுக்கான, வலுவான பொருளாதார மீட்சியை விரைவில் அடையச் செய்யும் என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கையின் நீண்டகால நண்பராக இருந்து பல்வேறு உதவிகளை வழங்கி வரும் இந்தியாவின் தலையீடு எப்போதும் பாராட்டத்தக்கது எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.