deepamnews
இலங்கை

மாபியா போல் செயற்படும் தொல்லியல் திணைக்களம் – வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன் காட்டம்

கடந்தகாலத்தை எடுத்துப் பார்ப்போமேயானால் தொல்லியல் திணைக்களம், அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டு ஒரு மாபியா போல் செயற்பட்டு வருகிறது என நான் எனது அனுபவ ரீதியாக பார்க்கின்றேன் என வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் தனியார் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று யாழ். நல்லூர் பிரதேசத்திலே மந்திரிமனை போன்ற பழமை வாய்ந்த இராசதானிகள் திருத்தம் செய்வதற்காக தொல்லியல் திணைக்களம் அதனை பொறுப்பேற்று இப்போது புனரமைப்பு வேலைகளை செய்வதற்காக, உள்ளே யாரும் பார்வையிடவோ அல்லது வேறு விடயங்களுக்கோ உள்ளே வரக்கூடாது என அறிவித்தல் வெளியிட்டுள்ளது.

தொல்லியல் திணைக்களம் முல்லைத்தீவில் குருந்தூர் மலையிலே சிவன் ஆலயம் இருக்கின்ற இடங்களை கையகப்படுத்தி, அந்த பிரதேச மக்கள் ஏற்றுக்கொள்ளாத விடயங்களை திணித்து, சிவன் ஆலயம் இருந்த அடையாளங்களை அழித்து அங்கு ஒரு பௌத்த விகாரை அமைப்பதற்கு நீதிமன்றத்தை நாடியது. இதன்போது நீதிமன்றத்தின் தீர்ப்பினை மீறி, தொல்லியல் திணைக்களம் குருந்தூர் மலையில் பௌத்த விகாரையை நிறுவியது.

கடந்த பல வருடங்களுக்கு முன்னர் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் மந்திரி மனை உள்ளூராட்சி மன்றங்களுக்குள் உட்பட்டு யாழ். மாநகர சபையின் கீழ் இருந்த காலகட்டத்தில் நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் வந்து பார்வையிட்டு அதனை திருத்தம் செய்ய வேண்டும் என கூறினார்கள்.

அப்போது அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சில ஆண்டுகளில் ஆனந்தசங்கரி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டு புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்ததை கூறமுடியும்.

ஆனால் இதையெல்லாம் விடுத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குள்ளே இருக்கின்ற இவ்வாறான செயற்பாடுகளை விசேடமாக தொல்லியல் திணைக்களம் செய்து வருகிறது.

இனங்களை அழித்து வரலாற்று பொக்கிஷங்களை அழித்து, வரலாற்று சுவடுகளை அழித்து ஒரு இனத்தை எவ்வளவு கேவலமாக நடாத்த முடியுமோ அவற்றை எல்லாம் செய்வதற்காக உருவாக்கப்பட்டதே தொல்லியல் திணைக்களம் எனவே தொல்லியல் திணைக்களம் நல்லூர் மந்திரிமனை விடயத்தில் வெளிப்படையாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

அத்தியாவசிய செலவினங்களுக்கு மாத்திரம் நிதி ஒதுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

videodeepam

என்னை தீர்மானித்தது இந்தியா அல்ல! – சிறீதரன் அறிவிப்பு.

videodeepam

குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர்

videodeepam