இலங்கையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள பொருட்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
வரி வசூல் தொடர்ந்து வளர வேண்டும் என்றும் கடனாளியின் நம்பிக்கையை மீண்டும் பெற கடுமையான வரி சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, இலங்கைக்கான கடன் பொதிக்கான அனுமதியைப் பெற்ற பின்னர் எதிர்வரும் வேலைத்திட்டம் குறித்து விளக்கமளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார மந்தநிலையிலிருந்து மீள்வதற்கு வலுவான மற்றும் தாக்கம் செலுத்தும் சீர்திருத்தம் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்துள்ள வெளிநாட்டு கையிருப்பு, உயர் பணவீக்கம், நிலையற்ற பொதுக்கடன் மற்றும் அதிகரித்த நிதித்துறை அபாயங்களுக்கு மத்தியில் இலங்கை கடுமையான அபாயங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, சீர்திருத்தங்களுக்கான வலுவான உரிமையுடன் கூடிய விரிவான கடன் வசதிகளை ஆதரிக்கும் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவது மிகவும் முக்கியம்.