புனித ரமழான் மாதத்தில் அல்-அக்ஸா பள்ளிவாசலில் இடம்பெற்ற சம்பவங்கள் உட்பட, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
எனவே, மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமையைத் தீர்ப்பதற்கு நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், அமைதியைப் பேணவும், நிலையான நடவடிக்கைகளை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இலங்கை கேட்டுக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சாசனம் மற்றும் தொடர்புடைய ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின் விதிகளுக்கு இணங்க பாலஸ்தீன மக்களின் உரிமைக்கான இலங்கையின் அசைக்க முடியாத ஆதரவை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, 1967 எல்லைகளின் அடிப்படையில் இரு நாடுகளின் சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவுருக்களுக்கு இணங்க பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.