பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அஜித் பி பெரேரா இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும், நாட்டின் குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் சட்டங்களை இயற்றும் என எதிர்பார்த்தோம். தற்போது அனைவராலும் பேசப்பட்டு வரும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் மிகவும் பாரதூரமான பிரச்சினையாக மாறியிருப்பதற்குக் காரணம், இந்தச் சட்டம் உரிய பரிசீலனையின்றி, இந்த விவகாரத்தில் தொடர்புடைய அரச சார் அமைப்புகள் மற்றும் பிற குழுக்களுடன் முறையான கலந்துரையாடல் இன்றி உருவாக்கப்பட்டதே ஆகும். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் போதியளவு கருத்திற்கொள்ளப்படாமலேயே உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நாடா ளுமன்றத்தில் முன்வைத்த பின் ஐக்கிய மக்கள் சக்தி கண்டிப்பாக உயர்நீதிமன்றத்தை நாடும்.
ஆனால் உயர்நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தை மட்டுமே கருத்தில் கொள்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொருத்தமற்ற தன்மையை ஆராய உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. மூன்றில் இரண்டு ஆதரவு போதுமானதா அல்லது சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா என்ற நிலைப்பாட்டையே முன்வைக்கும். இதை எமது சட்டத்தரணிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நிச்சமயம் உயர் நீதிமன்றம் செல்வோம் என்று தெரிவித்துள்ளார்.