பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தேவையற்ற கருத்துக்களை வெளியிடுவதால் பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குருணாகலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கைதுசெய்வதற்கான அரசியல் செயற்பாடுகளில் பேராயர் தலையிடுவது பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ என்போர் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க மாட்டார்கள் என கூறிய அவர், தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் அந்த பட்டியலில் இணைத்துள்ளார்.
அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக செயற்படாமல் உண்மையை கண்டறிவதற்காகவே நாம் செயற்பட வேண்டும்.
அதனை விடுத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவோ ஜனாதிபதிகளை தெரிவுசெய்ய முயற்சிப்பதோ பொருத்தமற்றது.
தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தமது ஆட்சியில் தண்டனை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறிக்கொண்டிருக்கின்றார்.
எதிர்பாராத விதமாக அவர் அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு அவராலும் பிரதான சூத்திரதாரிகள் இனங்காணப்படாவிட்டால் பேராயர் அவருக்கு எதிராகவும் செயற்படுவார் என்றும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.