07 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இடமாற்றம் செய்யப்பட்ட 07 அதிகாரிகளில் மிகவும் சிரேஷ்ட அதிகாரியான மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, தனது இடமாற்றத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில், வெறுக்கத்தக்க, சட்ட விரோதமான, அநியாயமான இந்த இடமாற்றத்தை அங்கீகரிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட டி.ஐ.ஜி ஒருவர் சேவை தேவைகளின் அடிப்படையிலும், அமைச்சின் செயலாளரின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் டி.ஐ.ஜி தெரிவித்துள்ளார்.
அமைச்சின் செயலாளரின் இந்த நடவடிக்கையால், மற்ற மூத்த டிஐஜிக்களும் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த வகையில், தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, தம்மை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறிப்பிட்ட சிரேஷ்ட டிஐஜி ஒருவரை பாதுகாப்பதற்காக அமைச்சின் செயலாளர் ஊடாக அமைச்சர் வழங்கிய இந்த இடமாற்றம் சட்டவிரோதமானது மற்றும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் வெறுப்பூட்டும் செயலாகும் என அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.