ஐனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் செயலக பணிக்குழு தலைவர் சாகல ரத்நாயக்க நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்து நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உள்ளக பொறிமுறை மூலம் நீதி வழங்க புதிதாக ஆணைக்குழு அமைப்பதாக கூறியுள்ளார்.
யுத்தம் முடிந்து பதின்நான்கு ஆண்டுகள் கடந்துள்ளன பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க உருவாக்கப்பட்ட பல ஆணைக்குழுக்கள் மற்றும் உள்ளக நீதிப் பொறிமுறைகள் யாவும் காலத்தை கடத்துவனவாகவும் ஆட்சியாளர்கள் அவற்றை துஸ்பிரையோகம் செய்வதுமாகவே அமைந்தது இதனால் ஏமாற்றம் அடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளகப் பொறிமுறைகளில் நம்பிக்கையை இழந்து சர்வதேச பொறிமுறை மூலம் தமக்கான நீதி வழங்கப்பட வேண்டும் என ஒருமித்த கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
இலங்கை ஆட்சியாளர்களினால் கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பர்ணகம ஆணைக்குழு அத்துடன் உடலகம ஆணைக்குழு போன்றன காலத்தையும் நீதியையும் நீர்த்துப் போகச் செய்யும் வகையில் கிடப்பில் போடப்பட்டன அத்துடன் ஐ நா மனிதவுரிமைப் பேரவையால் வழங்கப்பட்ட உள்ளகப் பொறிமுறை திட்டமிட்டு காலம் கடத்தப்பட்டது.
இலங்கை அரசு உள்ளகப் பொறிமுறை நீதிக்கான சந்தர்ப்பங்களை திட்டமிட்டு அலட்சியப் படுத்திவிட்டு மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்ற தயாராகின்றனர்.
எனவே உள்ளக நீதிப் பொறிமுறை தோல்வியடைந்து விட்டது பாதிக்கப்பட்ட மக்களும் அதனை நிராகரித்து விட்டனர் ஆகவே நியாயமான நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் சர்வதேச நீதிப் பொறிமுறையே அவசியமானதாகும்.