பதுளை – மடுல்சீமை மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மன்னிப்பு கோர வேண்டும் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் மன்னிப்புகோரவில்லை என்றால், ஐக்கிய மக்கள் சக்தியுடனான பயணத்தை தொடர்வதற்கு நான் தயாரில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது வடிவேல் சுரேஷ் மேலும் தெரிவிக்கையில்,
எமது மக்கள் பயங்கரவாதிகள் அல்லர். பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. நாட்டின் வன்முறைகளில் ஈடுபட்டதில்லை. நாடு மேம்பட உழைத்த அவர்களுக்கு ஏன் புறக்கணிப்பு? இன்னும் காணி உரிமை அற்றவர்களாக வாழ்கின்றனர்.
எங்கள் மக்களுக்கு உண்ண உணவில்லை, பாதுகாப்பாக வாழ காணி இல்லை. மக்கள் இப்படி தவிக்கையில் எனக்கு கட்சி, சின்னம் என்பன முக்கியம் இல்லை.
தற்போதைய சூழ்நிலைக்கமைய நாள் சம்பளமாக 3,250 ரூபா வழங்கப்பட வேண்டும். பேராதனை பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
எனவே, அந்த தொகையை வழங்குமாறு கம்பனிகளுக்கு ஜனாதிபதி கட்டளையிட வேண்டும்.
அதேவேளை, எமது மக்களை செல்லாக்காசாக கருத வேண்டாம் என எமது கட்சி தலைவர் சஜித்திடம் கூறுகின்றேன்.
அவர் மடுல்சீமை கூட்டத்துக்கு வரவில்லை. ஆக மடுல்சீமைக்கு வந்து அவர் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையேல் சஜித்துடன் எனது பயணம் தொடராது என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.