நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் இரத்து செய்யப்பட்டு ஜனநாயகம், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் தேசிய பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் எனவும் இந்த சட்டமூலத்துக்கு எதிரான போராட்டங்களை ஒன்றிணைப்போம் என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது உதய கம்மன்பில மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டும் ஊடகங்கள், ஊடகவிளலாளர்கள், தொழிற்சங்கத்தினர் அனைவரும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவார்கள்.
ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிகளின் பேச்சுரிமை முடக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டால் சர்வாதிகாரத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்தி அரசாங்கம் செயற்படும்.
ஜனநாயகம் பேச்சளவில் மாத்திரமே செயற்படுத்தப்படும். ஒரு நபரின் வன்முறையான செயற்பாட்டை ஊடகங்கள் வெளியிடும் போது அதனை அரசாங்கம் பயங்கரவாதமாக கருதுமாயின் அந்த செய்தியை வெளியிட்ட ஊடகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இந்த சட்டமூலத்தின் ஊடாக வழங்கபட்டுள்ளது.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அரச சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட முடியாது. ஜனாதிபதி எந்த சேவையையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்த முடியும். அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சேவைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.