உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பான யோசனைகளை எதிர்வரும் வாரம் நீதியமைச்சரிடம் முன்வைக்கப்படுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சட்டமூலங்களுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பெரும்பாலான விடயங்கள் அரசியலமைப்பின் மூன்றாம் அத்தியாயத்தின் உறுப்புரைகளுக்கும்,ஜனநாயக கொள்கைக்கும் எதிரானதாக உள்ளது.ஆகவே இந்த சட்டமூலம் முழுமையாக திருத்தம் செய்யப்பட வேண்டும்.
திருத்தமில்லாமல் சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு எதிராக வாக்களிப்போம் என ஜனாதிபதி,நீதியமைச்சர் ஆகியோரிடம் வலியுறுத்தினோம்.
அத்துடன் இந்த சட்டமூலத்துக்கு எதிராக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடும் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.
ஆகவே சட்டமூலத்தை பரிசீலனை செய்ய மீளாய்வு குழு ஒன்றை நியமிக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
சட்டமூலத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானது என்பதை நீதியமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார்.சட்டமூலம் தொடர்பில் பொதுமக்கள்,அரசியல் தரப்பினரிமிருந்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.சட்டமூலம் தொடர்பான எமது யோசனைகளை எதிர்வரும் வாரம் நீதியமைச்சரிடம் முன்வைப்போம்.
நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சட்டமூலங்களுக்கும்,செயற்பாடுகளுக்கும் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க போவதில்லைதொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் கடந்த மே தின கூட்டத்தில் வெளியிடப்பட்ட யோசனைகளை செயற்படுத்துவது தொடர்பில் தொழில் அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.