“கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியிலிருந்து விரட்டியது சதி இல்லை. அது மக்கள் போராட்டம்” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மக்கள் போராட்டம் என்பது மொட்டுக் கட்சியினர் கூறுவது போல் சதி இல்லை. அது நியாமான மக்கள் போராட்டம். மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை காரணமாக அவர்கள் வீதிக்கு இறங்கிப் போராடி கோட்டாவை விரட்டியடித்தனர்.
அன்று வீதிக்கு இறங்கிய அத்தனை மக்களும் எதிர்பார்த்தது சிறந்த மாற்றம் ஒன்றை. அந்த மாற்றத்தைக் கொடுக்காமல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியாது. இதனால் எம்.பிக்கள் மிகவும் கவனமாக – பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்.
இந்த நேரத்தில் எமது ஆட்சி இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து நிபந்தனைகளுக்கும் இணங்கி இருக்கமாட்டோம்.
கடன் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். ஆனால், செய்கின்ற முறை பற்றி அரசு கூறுவதில்லை.
சிறிய தொழில் முயற்சியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த நிவாரணத்தையும் இந்த அரசு வழங்கவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியுடன் இதற்கான வேலைத்திட்டத்தைத் தொடங்க முடியும். இதன் மூலம் உள்ளூர் உற்பத்தியையும் ஏற்றுமதி வர்த்தகத்தையும் அதிகரிக்க முடியும்.
இன்று இந்தப் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக அதிகமான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இவற்றுக்கு முன்னுரிமை வழங்கும் வேலைத்திட்டங்களுக்கு நாம் பூரண ஆதரவு வழங்கத் தயார்.” – என்றார்.