deepamnews
இலங்கை

போலித் தகவல்களை வழங்கினால் சட்ட நடவடிக்கை – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

அக்குரணை நகரத்திலும், முஸ்லிம் மக்கள் அதிகளவில் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக போலியான தகவல்களை வழங்கிய இளம் மௌலவி ஹரிபத்துவ பிரதேசத்தில் (22) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பினை கேலிக்குள்ளாக்கும் வகையில் இவ்வாறான போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அக்குரணை நகரத்தில் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து அலவத்துகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, துணை பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் அங்குள்ள பள்ளிவாசல்களுக்கு சென்று மதத்தலைவர்களை சந்தித்து இது தொடர்பில் விளக்கமளித்து விசேட பாதுகாப்பினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.

18ஆம் திகதி கிடைக்கப் பெற்ற இந்தத் தகவலுக்கு மேலதிகமாக 19ஆம் திகதி முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாகவும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இந்த தகவலை வழங்கிய நபரை கண்டு பிடித்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவை போலியான தகவல்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நபரால் எதற்காக இவ்வாறு போலியான தகவல் வழங்கப்பட்டது என்பது அவரால் தெரிவிக்கப்படவில்லை.

அதற்கமைய அவர் நேற்று சனிக்கிழமை காலை ஹரிஸ்பத்துவ – பட்டுகொட என்ற பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.

21 வயதுடைய ஹிசதீன் மொஹம்மட் சஜித் என்ற மௌலவி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபரால் வழங்கப்பட்ட போலியான தகவல் காரணமாக பொலிஸார், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் வீண் அசௌகரியத்திற்கு உள்ளாக வேண்டியேற்பட்டது. அத்தோடு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வீண் செலவுகளும் ஏற்பட்டுள்ளன.

அத்தோடு சமூகத்தின் மத்தியில் மதக்குழுக்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படவும் இவ்வாறான செயற்பாடுகள் வழிவகுக்கும்.

அதனை அடிப்படையாகக் கொண்டே இந்த நபர் அடையாளங்காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தண்டனை சட்டக் கோவையின் 120ஆவது பிரிவின் கீழ் இவர் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Related posts

ஓமானில் இலங்கை தூதரகத்தை சேர்ந்தவர் 17 இலட்சத்திற்கு பெண்களை விற்கிறார் – பாதிக்கப்பட்ட பெண் தகவல்

videodeepam

தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை சந்தித்தார் நீதி அமைச்சர் விஜயதாச

videodeepam

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகிறார் ஜனக ரத்நாயக்க

videodeepam