ஜனநாயக தேர்தலை நிறுத்துவதற்கு ஒத்தாசை புரிந்த பி. எஸ். எம். சாள்ஸ் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனநாயகத்தை மக்கள் ஜனநாயகத்தை கேள்விக் குறியாக்கம் செயல் என ஐக்கிய மக்கள் சபையின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வன்னியசிங்கம் பிரபாகரன் தெரிவித்தார்.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழில் உள்ள வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் இடம் பெற்ற இலஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பு நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெற இருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை நிறுத்துவதற்காக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தவர் தற்போதைய ஆளுநர் சாள்ஸ்.
தனது சுப போகங்களுக்கும் பதவி ஆசைகளுக்கும் மக்களின் ஜனநாயகத் தேர்தலை கேள்விக்குறியாக்கியது மட்டுமல்லாது இலங்கையில் போட்டியிட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களின் நம்பிக்கையையும் சிதறடித்துள்ளார்.
இவர் முன்னர் ஆளுநராக இருந்தபோது எமது பிரதேசத்தில் இடம் பெற்ற ஊழல் தொடர்பில் மூன்று மணித்தியாலங்கள் காத்திருந்து அவரிடம் தெளிவுபடுத்தினேன்.
ஆனால் அவருடைய காலத்தில் எவ்விதமான விசாரணைகளோ நடவடிக்கைகளோ இடம்பெறவில்லை.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இவரை வட மாகாண ஆளுநராக நியமித்த நிலையில் தனது ஜனாதிபதி பதவிக்காலம் முடியும் முன்னரே அவரது பதவியை பறித்தார்.
அவரது பதவியை பாறித்ததற்கு அவர் மீது இருந்த பல்வேறு ஊழல் முறைகேடுகள் காரணமாக அமைந்தது.
ஆகவே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தான் நியமித்த ஆளுநரை பதவி நீக்கிய நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஆளுநராக பதவி வழங்கியமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
ஆகவே ஊழல் முறைகேடுகளுடன் தொடர்பு இல்லாத மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய தகுதியான ஆளுநர் ஒருவரை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.