வெலிக்கடை காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட பெண் ஒருவர், உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள், காவல்துறைமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில், வெலிக்கடை காவல்துறையின் நான்கு அதிகாரிகள், பணியிடை நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மூன்று அதிகாரிகள், உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதேநேரம், வெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரியை, பணியிடை நீக்குவதா? அல்லது இடமாற்றம் செய்வதா? என்பது தொடர்பாக தீர்மானிப்பதற்கான பரிந்துரையை முன்வைக்குமாறு, பொதுப் பாதுகாப்பு அமைச்சிடம் கோரியுள்ளதாகவும், பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
பதுளையைச் சேர்ந்த 42 வயதான குறித்த பெண், தாம் பணியாற்றிய வீட்டில் இடம்பெற்ற தங்க ஆபரண திருட்டுச் சம்பவம் தொடர்பில், கடந்த 11 ஆம் திகதி, வெலிக்கடை காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார்.
வீட்டின் உரிமையாளரான, தொலைக்காட்சி நாடகம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பெண், தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், அங்கு பணியாற்றிய குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட தினத்தன்று, அவர், வெலிக்கடை காவல்துறை நிலையத்தில் வைத்து, உடல்நலக் குறைவுக்கு உள்ளானதால், அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், அவர் மரணித்திருந்ததாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.