deepamnews
இலங்கை

யாழ். போதனா மருத்துவமனை மருத்துவக் கழிவுகளை அகற்ற புதிய நடைமுறை

யாழ். போதனா மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டியை யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் மயானத்தில் நிறுவுவதற்கு ஒருங்கிணைப்பு குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். போதனா மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி நிறுவுவதற்கு யு.என்.டி.பி. நிறுவனம் நிதி உதவி வழங்கியிருந்தது. எரியூட்டி அமைப்பதற்கான இடத்தை தெரிவு செய்வதில் நீண்ட இழுபறி நிலவியது.

ஒவ்வொரு இடத்திலும் பொதுமக்கள் எதிர்ப்புக்கள் தெரிவித்தமையால் இடத்தெரிவில் காலதாமதம் ஏற்பட்டிருந்தது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டது.

இதன்போது யாழ். போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி பங்கேற்று சில விளக்கங்களை வழங்கினார்.

மருத்துவக் கழிவுகள் (Medical waste) என்பதில் உடலின் சில பாகங்கள், குருதி, சிறுநீர் போன்றவை தான் இருக்கும். முழுமையான உடலை தகனம் செய்கின்றார்கள்.

அதில் சில கழிவுகள் எஞ்சும். ஆனால் மருத்துவக் கழிவுகளை எரியூட்டிகள் ஊடாக தகனம் செய்யும் போது எவையும் மிஞ்சாது.

சூழலுக்கு எரியூட்டி ஊடாக புகை செல்வதே தெரியாது. எரியூட்டியில் முதலில் 650 டிகிரியில் மருத்துவக் கழிவுகள் தகனம் செய்யப்படும்.

பின்னர் 800 தொடக்கம் ஆயிரம் செல்சியஸ் வெப்பத்தில் அவை இரண்டாவதாக தகனம் செய்யப்படும். இதனால் சூழல் பாதிப்பு ஏற்படாது.

இதை மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்குத் தெளிவூட்ட வேண்டும். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலும் சிறிய எரியூட்டி உள்ளது.

எதிர்காலத்தில் அதுவும் இயக்கப்படும்’ என்று மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதன்போது கோம்பயன் மணல் மயானச் சபை சார்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதி, எரியூட்டி அமைப்பதற்கு நாம் இணக்கம் தெரிவித்துள்ளோம்.

எரியூட்டியின் புகைபோக்கியின் உயரம் 22 மீற்றராகும் என்று எமக்குத் தெரிவிக்கப்பட்டது.

எனவே சூழல் பாதிப்பு ஏற்படாது என்ற வகையில் நாமும் இணங்குகின்றோம் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, மயானம் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமானது என்ற அடிப்படையில் எரியூட்டி அமைப்பது தொடர்பில் போதனா மருத்துவமனை மாநகர சபையுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவேண்டும் என்று மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் கேட்டுக்கொண்டதையும் ஒருங்கிணைப்புக்குழு ஏற்றுக்கொண்டது.

Related posts

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெல்லிப்பழையில் பேரணி!

videodeepam

”சைனா கோ ஹோம்” போராட்டம் நடத்தப்படும் – சாணக்கியனின் எச்சரிக்கை

videodeepam

இலங்கையர்கள் 10,000 டொலருக்கான இந்திய ரூபாயை வைத்திருக்கலாம் 

videodeepam