வீட்டு வேலைகளுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இலங்கைப் பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வழிகாட்டல் தொகுப்பை தயாரிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஓமானில் வீட்டுப் பணிப்பெண்ணாக துன்புறுத்தப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த செல்லையா காளி அம்மா என்ற பெண்ணின் சார்பில்சட்டத்தரணி மஞ்சுளா பாலசூரியவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவின் பிரதிவாதிகளாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி, அதன் பணிப்பாளர்கள், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சின் செயலாளர், ஓமான் தூதுவர் அமீர் அஜ்வாட் உள்ளிட்ட 11 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
மனுதாரர் காளி அம்மா ஏப்ரல் 2022 இல் வீட்டு வேலைக்காக ஓமன் சென்றார்.
ஓமன் செல்வதற்கு முன்னர் லெபனானில் 6 வருடங்களும் குவைத்தில் 3 வருடங்களும் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓமன் நாட்டில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்ற அவர், அந்த வீட்டில் துன்புறுத்தப்பட்டதாகவும்,
வேலை திருப்திகரமாக இல்லை எனக் கூறி வீட்டை விட்டு வெளியே அனுப்ப அந்த வீட்டின் முதலாளிகள் முடிவு செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்பிறகு, சம்பந்தப்பட்ட பெண் ஓமானில் அமைந்துள்ள பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டார், அங்கு பாதிக்கப்பட்ட சுமார் 30 பெண்கள் இருந்தனர்.
அங்குள்ள பெண்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகியிருந்தனர், அவர்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.