நெடுந்தீவில் ஐவர் கோரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை காவல்துறையினர் புங்குடுதீவு பெருங்காட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் ஜேர்மனியில் இருந்து திருப்பி அனுப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த சந்தேகநபரை ஊர்காவற்துறை காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் படுகொலை செய்யப்பட்டவர்களின் வீட்டில் தங்கியிருந்தவர் எனவும் அவர் புங்குடுதீவினை சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது, நெடுந்தீவு மாவலி இறங்கு துறையிலுள்ள கடற்படை முகாமுக்கு அருகில் வீட்டில் வசிக்கும் மூதாட்டியொருவர் நெடுந்தீவுக்கு செல்வோருக்கு தங்குமிட வசதிகளை வழங்குதல் ,உணவு வழங்குதல் போன்றவற்றை தொழிலாக செய்து வந்துள்ளார்.
இவரது கணவர் 1986ஆம் ஆண்டு குமுதினி படுகொலையின் போது படுகொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த மூதாட்டி தனது வாழ்வாதாரத்தை தானே கொண்டு நடாத்தி வந்துள்ளார்.

நெடுந்தீவில் உள்ள ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கு யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மற்றும் புலம்பெயர் நாடொன்றில் இருந்து வந்திருந்த ஐவர் வெள்ளிக்கிழமை(21) நெடுந்தீவு சென்று இறங்குதுறைக்கு அருகில் உள்ள குறித்த மூதாட்டியின் வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த வீட்டில் இருந்து நேற்றய தினம் சனிக்கிழமை காலை எவரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அயலவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது வெட்டு காயங்களுடன் ஐவர் சடலங்களாக காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் இருந்து மேலதிக காவல்துறையினர் நெடுந்தீவு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வீட்டின் சற்று தூரத்தில் முன் பகுதியில் கடற்படை முகாம் அமைந்துள்ளமையால் , வீட்டின் பின் பகுதி ஊடாகவே கும்பல் வீட்டினுள் புகுந்து இருக்கலாம் எனவும் , வாள்கள் மற்றும் கோடாரி போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டே கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.