22 ஆவது அரிசியலமைப்பு திருத்தத்தில் எதிர்க்கட்சி தலைவரால் கோரப்பட்டுள்ள இரண்டு திருத்தங்களை செய்வதற்கு மாத்திரமே இணக்கம் தெரிவித்துள்ளதாக, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
“தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களே கையுயர்த்தி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான காலத்தினை நான்கரை வருடங்களாக மாற்றிக் கொண்டுள்ளனர்.
ஆகையினால் நாங்கள் அந்த பரிந்துரையில் எவ்வித மாற்றங்களையும் செயற்படுத்த முயற்சிக்கவில்லை.
19 ஆவது திருத்தத்திலேயே நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான காலம் நான்கரை வருடத்திலிருந்து இரண்டரை வருடமாக குறைக்கப்பட்டது.
20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தில் தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களே அதனை நான்கரை வருடங்களாக்கியுள்ளனர்.
நாடாளுமன்றத்தினை நான்கரை வருடத்தில் கலைப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் இணங்கியுள்ளன.
இரட்டை குடியுரிமை தொடர்பில் சட்ட ரீதியான தீர்வுகள் காணப்படுகின்றமையினால் அதனை நீக்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.
22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மக்களுக்கே அதிக தேவையாக காணப்படுவதால் இதனை நாங்கள் நிறைவேற்றிக் கொள்வோம்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் உண்மை தன்மையை எடுத்துணர்த்திய போதே அதற்கு அதிகமானோர் வாக்களித்தனர்.
அதனைப் போன்றே இதற்கும் 150 பேர் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்